சந்தோஷமோ அல்லது துக்கமோ எதுவாக இருந்தாலும் அதை அதிரடி சரவெடியாய் வெளிப்படையாக போட்டுத் தாக்குவதுதான் மதுரை மண் அரசியலின் ஸ்டைல். அந்த ஸ்டைலில் இப்போது ஆளுங்கட்சியின் வாரிசுகள் மூன்று பேர் கட்சி தலைமைக்கு எதிராக பண்டல் பண்டலாய் எதிர்ப்புப் பட்டாசை கொளுத்திப் போட, அதிரி புதிரியாகி கிடக்கிறது மதுரை மண்ணின் அரசியல். 

முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கத்தின் மகன் கர்ணன், மறைந்த மாஜி எம்.எல்.ஏ. போஸின் மகன் சிவசுப்ரமணியன் மற்றும் மறைந்த மாஜி எம்.எல்.ஏ. சீனிவேலின் மகன் செல்வக்குமார் ஆகிய மூவரும்தான் அந்த அதிரடிப் பேர்வழிகள். திருப்பரங்குன்றம் தொகுதியில் தன் அப்பா முத்துராமலிங்கத்துக்கு சீட் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாந்த கோபத்திலிருக்கும் கர்ணன் “ஆனானப்பட்ட அம்மா காலத்தில் எங்க அப்பாவுக்கு கிடைச்ச மரியாதை கூட இப்ப இருக்கிறவங்க காலத்தில் கிடைக்கிறதில்லை. ரொம்பவே ஒதுக்கி, ஓரங்கட்டி அசிங்கப்படுத்துறாங்க. 

ஆனால் நாங்க ஓ.பி.எஸ். குடும்பத்தில் ஒருத்தரா இருக்கிறதாலே எதையும் சட்டுன்னு முடிவெடுக்க முடியாத கையறு நிலையில் இருக்கிறோம். ஆனால் எங்களோட ஆதரவாளர்கள் ‘பன்னீர்செல்வம் எங்களை கைகழுவிட்டார்’ன்னு சமூக வலைதளங்களில் எழுதுறதை பத்தி எங்களுக்கு ஒண்ணும் தெரியாது.” என்று பன்னீரையும் சேர்த்து வெளுத்திருக்கிறார். இப்போது இடைத்தேர்தல் வரக் காரணமான இறந்த போஸின் மகன் சிவசுப்ரமணியனோ ”வாய்ப்பு கிடைத்த மூன்று முறையுமே எங்கப்பா ஜெயிச்சார். அப்படின்னா எங்கள் குடும்பத்தின் மீது மதுரை மக்களுக்கு இருக்கும் நன்மதிப்பும், மரியாதையும் புரிஞ்சுக்கலாம். ஆனால் இந்த மரியாதைக்கு என்ன பதில் மரியாதையை இந்த கட்சி தலைமை கொடுத்திருக்குது! எங்க குடும்பத்துக்கே வேட்பாளர் வாய்ப்பை கொடுத்திருக்கலாமே! ஏன் செய்யலை?” என கொதித்திருக்கிறார். 

அதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற சேதி வருவதற்குள் இறந்தார் சீனிவேல். இவரது மகன் செல்வக்குமாரும் கொதிப்பாக “எங்கப்பா எலெக்‌ஷன்ல நின்னப்போது பூர்வீக சொத்துக்களை ரெண்டரை கோடிக்கு வித்து செலவு பண்ணினோம். இந்த தொகையை திருப்பித் தர்றேஎன்னு கட்சி தலைமை சொன்னாங்க. ஆனால் அப்புறம் கண்டுக்கவே இல்லை. ஆனாலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் வார்த்தையை நம்பி, அவர் சொன்ன வேலைகளை எல்லாம் பம்பரமா சுற்றி செஞ்சேன். ஆனாலும் அவர் எங்களுக்கு ஆதரவா தலைமையிடம் ஒரு வார்த்தை கூட பேசுறதில்லை. 

கேட்டால் ‘நான் என்ன பண்ண முடியும்?’ அப்படின்னு கழுத்தை அறுத்துட்டார். கூடிய சீக்கிரம் முதல்வர் எடப்பாடியாரை சந்திச்சு பேசி இதுல ஒரு முடிவை எடுக்கப்போறோம்.” என்றிருக்கிறார். இப்படி முக்கிய புள்ளிகளின் வாரிசுகள் ஆளுங்கட்சி தலைமைக்கு எதிராக கொதிக்க, அவர்களை தங்கள் கட்சிக்குள் இழுக்க தி.மு.க.வும், தினகரனும் போட்டி போட்டுக் கொண்டு வேலை பார்க்கிறார்கள். இதையெல்லாம் கவனித்துக், கடுப்பின் உச்சத்தில் இருக்கிறார் எடப்பாடியார்.