நேற்று  5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ். தெலங்கானாவில் காங்கிரஸ்- தெலுங்கு தேசம் கூட்டணியை வீழ்த்தியுள்ளது தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி. வடகிழக்கு மாநிலமான மிசோரமில், காங்கிரசிடம் இருந்து மிசோரம் தேசிய முன்னணி ஆட்சியைப் பறித்துள்ளது.

மத்தியப் பிரதேச தேர்தல் முடிவு வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் நள்ளிரவிலும் தொடர்ந்தது. காங்கிரஸ் – பாஜக மாறிமாறி முன்னணி வகித்துவந்த நிலவரம் குழப்பத்தை ஏற்படுத்தியது. நள்ளிரவு 12 மணிக்கு பாஜ வெற்றி பெற்றது 82 இடங்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றது 81 இடங்கள் என இருந்தது. முன்னணியுடன் சேர்த்து பாஜ 110, காங்கிரஸ் 113 என இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் கமல்நாத், நேற்றிரவு மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேலைச் சந்தித்து கடிதம் கொடுத்தார். அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால்தான் சந்திக்க முடியும் என ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டார். 

ஆட்சியமைக்க 116 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி,  மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 108, காங்கிரஸ் 112, பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாதி 1, இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

23 மணிநேரமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் இடம் கிடைக்கவில்லை.