மத்தியப்பிரதேசத்தில் செல்வாக்குமிக்க தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, மத்திய பிரதேசத்தில் கர்நாடகா பாணியில் ஆட்சியில் அமர பாஜக திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2018-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. பாஜ.வுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். முதல்வர் வேட்பாளர் சிந்தியாவை நிறுத்த பல எம்எல்ஏக்களும் விரும்பினர். ஆனால், சீனியர் தலைவர் என்பதால் கமல்நாத்துக்கு மீண்டும் முதல்வர் பதவியை மேலிடம் அளித்தது. இதனால் சிந்தியா தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தார். 

இந்நிலையில், மத்தியப் பிரதேச அமைச்சர் 6 பேர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர், தனி விமானத்தில் பெங்களூரூ சென்றனர். இவர்கள் ஜோதிராதித்யா சிந்தியாவின் தீவிர ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. இதனால், மத்தியப் பிரதேச அரசியலில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, முதல்வர் கமல்நாத் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர், அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். 

இந்நிலையில், மத்திய பிரதேச காங்கிரசில் அதிருப்தியில் உள்ள ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைய விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். ஜோதிராதித்ய சிந்தியா பாஜக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது