ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்சுக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஒரு வாரம் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று கூறி மதுசூதனன் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு கடிதத்தை அ.தி.மு.க தலைமைக்கு அனுப்பினார். 

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்த உள்ளடி வேலைகள் தான் தனது தோல்விக்கு காரணம் என்றும், பாலகங்காவுடன் சேர்ந்து கொண்டு தேர்தலில் தன்னை தோற்கடிக்க ஜெயக்குமார் வேலை செய்தார் என்றும் மதுசூதனன் அந்த கடிதத்தில் கூறியிருந்ததாக தகவல் வெளியானது.

மேலும் தேர்தல் தோல்வி தொடர்பாக மதுசூதனன் எழுதிய கடிதம் குறித்து அப்போதே ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் கூடி ஆலோசனை நடத்தினர். அமைச்சர் ஜெயக்குமாரிடம் விளக்கம் கேட்டதாக கூட சொல்லப்பட்டது. 

ஆனால் யார் மீதும் அ.தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து ஆர்.கே.நகர் உள்ள வட சென்னை பகுதியில் மதுசூதனன் மற்றும் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் இடையே உட்கட்சி பூசல் அதிகரித்த வண்ணமே இருந்தது. இந்த பூசல் கூட்டுறவு சங்க தேர்தலின் போது மோதலாக வெடித்தது. மீனவர்கள் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் பதவிக்கு ஜெயக்குமார் ஆதரவாளர்களும் மதுசூதனன் ஆதரவாளர்களும் களம் இறங்கியதால் பிரச்சனை ஏற்பட்டது. 

ஜெயக்குமார் தூண்டுதலின் பேரில் மீன்வளத்துறை அதிகாரிகள் மதுசூதனன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மதுசூதனன் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாருக்கு எதிராக பேட்டி அளிக்க தயாரானார். ஆனால் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் மதுசூதனனை அழைத்து பிரச்சனை குறித்து கேட்டறிந்தனர். 

மேலும் ஜெயக்குமாரிடம் விளக்கம் கேட்பதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் இந்த முறை ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவைத்தலைவர் என்ற முறையில் தான் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்சிடம் மதுசூதனன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஒரு வார காலத்திற்குள் ஜெயக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுசூதனன் கெடு விதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜெயக்குமாரை அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுசூதனன் உடனான பிரச்சனை குறித்து பேசியுள்ளார். மேலும்  சமரசமாக செல்வது தான் சரி என்றும் முதலமைச்சர் ஆலோசனை சொன்னதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து தனக்கும் மதுசூதனனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று ஜெயக்குமார் கூறி வருகிறார்.