முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, வாழ்த்து சொல்வதற்காக ஜெ.யின் அண்ணன் மகள் தீபாவின் கணவர்
மாதவன், அதிமுக அலுவலகத்துக்கு சென்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டு சாதனைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெகு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா, சென்னை கலைவாணர் அரங்கில் பேரவை தலைவர் தனபால் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. அப்போது சிறப்பு மலர் ஒன்றும், சாதனை விளக்கப் படங்கள், புகைப்படங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட உள்ளார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் கணவர் மாதவன், இன்று முற்பகல் அதிமுக அலுவலகத்துக்கு திடீரென வந்தார். அதிமுக அலுவலகத்துக்கு வந்த அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதிமுக அலுவலகத்தில் இருந்தவர்கள்,
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கு இல்லை. அவர் வந்தவுடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாதவன் பேசும்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சி, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனால், முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அதிமுக அலுவலகத்துக்குச் சென்றேன். அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர் இல்லை. பிறகு அவரைச் சந்திப்பேன் என்றார்.