முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25-ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் கோபாலபுர இல்லத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக 27-ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 11 நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்தார்.

இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேசமயம் திமுகவினர் சென்னையில் குவிந்துள்ளனர். இதனால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.  

அரசுப் பேருந்து சேவையும் பல்வேறு இடங்களில் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 6.10 மணிக்கு திமுக தலைவர் மண்ணை விட்டு பிரிந்தார். இதனால் தொண்டர்கள் கண்ணீர் மல்க கலைஞர் ஐயா, கலைஞர் ஐயா என்று எங்கு பார்த்தாலும் அழுகுரல் சத்தம் கேட்டு வருகிறது.