இதர பிறபடுத்தப்பட்டோருக்கு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு சீட்டுக்கூட ஒதுக்கப்படவில்லை என்று தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. இந்த விவகாரத்தில்  ‘பெரும்பான்மை இந்துக்களை படிக்கவிடாமல் பாஜக தடுக்கிறது’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார். இதர பிறபடுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்க திமுக முடிவெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவப் படிப்பில் முன்னேறுவது மிகவும் முக்கியம். அது ஒன்றே ஏற்றத் தாழ்வுகளை நீக்கி ஜாதிகளற்ற ஜனநாயகத்தை உறுதி செய்யும். இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின மாணவர்களுக்கு மத்திய தொகுப்பு இடங்களில் மாநில அளவிலான இடஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்படவில்லை. அப்படி இல்லாமலேயே மருத்துவப் படிப்பு சேர்க்கையில் அநீதி இழைக்கப்படுகிறது. இதை அனுமதிக்க முடியாது. இதற்காக திமுக நடத்தும் போருக்கு தங்களின் ஆதரவு தேவை.” என்று மு.க. ஸ்டாலின் கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.