திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுகவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நன்றி கலந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் நேற்று காலமானார். 98 வயதான க. அன்பழகனின் மறைவு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சோகத்தில் தள்ளியது. அன்பழகனின் மறைவுக்கு பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அன்பழகனின் மறைவையொட்டி மு.க. ஸ்டாலின் இன்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.


அவருடைய அறிக்கையில், “அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் பண்புடன் பழகிய பேராசிரியப் பெருந்தகைக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர், நேரில் வந்து மரியாதை செலுத்திய துணை முதல்வர், அமைச்சர் உள்ளிட்ட அதிமுகவினர், திமுக தோழமைக் கட்சித் தலைவர்கள் - நிர்வாகிகள், ஓய்வுப் பெற்ற உயர் அதிகாரிகள், மற்ற கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், தமிழறிஞர்கள், பொதுநல ஈடுபாடு கொண்டோர், கலையுலகத்தினர், வணிகத்துறையினர், பலதுறைகளையும் சார்ந்த சான்றோர்கள் அனைவருக்கும் திமுக என்கிற அரசியல் குடும்பத்தின் தலைவன் என்ற முறையில், கண்ணீர் கலந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.