எதைச் செய்தாலும் அவசர அவசரமாகவும் அரைவேக்காட்டுத்தனமாகவும் செய்து, சம்பந்தப்பட்டவர்களைக் கடும் பாதிப்புக்குள்ளாக்கிவரும் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இப்போது கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனிலும் அதே அவசர விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா ஊரடங்கினால் பள்ளி - கல்லூரிகள் திறக்கப்படாத சூழலில், கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ‘அரியர்ஸ்’ தேர்வுக்கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தேர்வுக் கட்டணம்தான் அளவுகோல் என்றால், ஊரடங்கால் தேர்வுக் கட்டணத் தேதிக்கான காலக்கெடுவைத் தவறவிட்ட மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதை எடுத்துரைத்து, கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவில் தளர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஏற்கனவே வலியுறுத்தியிருந்தேன்.


எதைச் செய்தாலும் அவசர அவசரமாகவும் அரைவேக்காட்டுத்தனமாகவும் செய்து, சம்பந்தப்பட்டவர்களைக் கடும் பாதிப்புக்குள்ளாக்கிவரும் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இப்போது கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனிலும் அதே அவசர விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கிறது. ‘அரியர்ஸ்' தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதற்குப் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் விதிமுறைகள் இடம் தராது எனக் கல்வியாளர்கள் பலர் கருத்து தெரிவித்துவந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பாவும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில் இதை ஏற்கவில்லை எனத் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
அந்தச் செய்தியை மறுத்த அத்துறைக்குச் சம்பந்தமேயில்லாத அமைச்சர் டி.ஜெயக்குமார், அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலின் விதிமுறைப்படிதான் தேர்ச்சி பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றார். அதிமுக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலிடமிருந்து எந்தக் கடிதமும் அரசுக்கு வரவில்லை என்றும், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குக் கடிதம் வந்திருந்தால், கவுன்சிலுக்கு அவர் என்ன பதில் கடிதம் எழுதுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.