குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்ததன் மூலமாக மத்திய அரசு எத்தகைய மக்கள் விரோத அரசு என்பது நாட்டுக்கு வெட்ட வெளிச்சம் ஆனதோ, அதைவிட அச்சட்டத்தை ஆதரித்து நிறைவேற்றக் காரணமாக அமைந்ததன் மூலம் அ.தி.மு.க அரசு அதிகமாக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு அவமானப்பட்டு நிற்கிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, மத்திய பா.ஜ.க அரசுக்கு பாதம் தாங்கிப் பணிவிடை செய்து கிடக்கும் கொத்தடிமை அரசு என்பதை அனைவரும் அறிவார்கள். 

அரசாங்கத்தை எதிர்த்துக் கோலம் போடுவது அலங்கோலம் என்றால், ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியைப் போலச் செய்து தெருத்தெருவாக ஒரு அமைச்சர் தூக்கிச் சென்று வாக்குப் பிச்சை கேட்டாரே அது அலங்கோலம் அல்லவா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:


“குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்ததன் மூலமாக மத்திய அரசு எத்தகைய மக்கள் விரோத அரசு என்பது நாட்டுக்கு வெட்ட வெளிச்சம் ஆனதோ, அதைவிட அச்சட்டத்தை ஆதரித்து நிறைவேற்றக் காரணமாக அமைந்ததன் மூலம் அ.தி.மு.க அரசு அதிகமாக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு அவமானப்பட்டு நிற்கிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, மத்திய பா.ஜ.க அரசுக்கு பாதம் தாங்கிப் பணிவிடை செய்து கிடக்கும் கொத்தடிமை அரசு என்பதை அனைவரும் அறிவார்கள்.


எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை, கருத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆகியவை அனைவருக்கும் சமமாக உண்டு. அந்த உரிமைகளைப் பறிக்கும் ஜனநாயக விரோத காரியங்களைத்தான் இன்றைய எடப்பாடி அரசு தாராளமாகச் செய்து வருகிறது. சுதந்திரம் என்பதையே தனது வாழ்க்கையில் அறியாமல் அடிமைக்கூட்டத்தில் வளர்ந்த எடப்பாடி, இப்போதும் புதிய எஜமானர்களை திருப்திப்படுத்த, ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
ஜனநாயக உரிமைகளை அமைதி வழியில் பயன்படுத்தும் வகையில் சென்னை பெசண்ட் நகரைச் சேர்ந்த மாணவ மாணவியர் கோலம் போட்டுள்ளனர். அவர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள்; அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வலுக்கட்டாயமாக வேன்களில் ஏற்றப்பட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். கோலம் போடுவது சமூகக் குற்றமா? தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த, அடுத்தவருக்கு எந்தத் தொல்லையும் இல்லாமல் கோலம் இட்டுள்ளனர். அவர்களால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதா? இல்லை. இந்த தகவல் கிடைத்ததும் அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன். அதன்பிறகு தான் அவர்களைக் காவல்துறை விடுவித்துள்ளது.
'கோலம் போடுவது தவறு இல்லை, ஆனால் அனுமதி வாங்க வேண்டும்' என்று தமிழக அமைச்சர் ஒருவர் பேட்டி அளிக்கிறார். 'கோலம் போடலாம், ஆனால் அது அலங்கோலமாக இருக்கக் கூடாது' என்று இன்னொரு அமைச்சர் சொல்கிறார். அலங்கோல ஆட்சியில் அமைச்சராக இருப்பவர்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது. அரசாங்கத்தை எதிர்த்துக் கோலம் போடுவது அலங்கோலம் என்றால், ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியைப் போலச் செய்து தெருத்தெருவாக அந்த அமைச்சர் தூக்கிச் சென்று வாக்குப் பிச்சை கேட்டாரே அது அலங்கோலம் அல்லவா? அலங்கோலம் குறித்து யார் பேசுவது? இந்த நாட்டில் கோலம் போடுவதற்கு அனுமதி வாங்க வேண்டுமானால், என்ன என்ன விஷயங்களுக்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்து விட்டால் நல்லது!” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.