துணைவேந்தர் சூரப்பா எழுதிய கடிதத்தை ஏதோ அது தனிப்பட்ட ஒருவரின் முயற்சியாக நான் கருதவில்லை. துணைவேந்தர் - முதலமைச்சர் பழனிசாமி - தமிழக ஆளுநர் ஆகியோர் கூட்டணியாக, எப்படியாவது அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர்கல்வியை, காவி மயமாக்கிடச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி நடவடிக்கையாகவே எண்ணிட வேண்டியதிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1500 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும்'' என்று, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள், தமிழக உயர்கல்வி வளர்ச்சியில், குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில், அக்கறை கொண்டிருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தரும்.


அதிமுக அரசின் சார்பில் இதுகுறித்து ஆராய்ந்து - கொள்கை முடிவு எடுக்க அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரை இன்னும் வெளிவராத சூழலில் - ஒரு துணை வேந்தர் எப்படித் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்? முதலமைச்சர் பழனிசாமி ரகசியமாகக் கொடுத்த “அனுமதி” காரணமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ‘உயர் சிறப்பு அந்தஸ்து’ என்று கூறிவிட்டு - மாநில அரசும் நிதியளிக்க வேண்டும் என்று கூறி வருகிறது மத்திய அரசு. 
69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எவ்விதப் பாதிப்பும் வராது என்று எவ்வித உத்தரவாதத்தையும் அதிகாரபூர்வமாக அளிக்க மத்திய பாஜக அரசு இன்றுவரை மறுத்து வருகிறது. மாநில நிதி நிலைமை - மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடுக் கொள்கை போன்றவற்றில் முடிவு எடுக்கவும், மாநில அரசின் நிதி தேவையில்லை - பல்கலைக்கழகமே அந்த நிதியைத் திரட்டிக் கொள்ளும் என்றும் மிக முக்கியமான முடிவுகளை எடுத்து, துணைவேந்தர் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கடிதம் எழுதுகிறார் என்றால் - அவர் என்ன மாநிலத்திற்கு இன்னொரு முதலமைச்சர் போல் செயல்படுகிறாரா?

மேலும், “துணைவேந்தர் எழுதியுள்ள கடிதத்திற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உரிய அதிகாரபூர்வமான உத்தரவாதம் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் பிரதமருக்கு உடனடியாகக் கடிதம் எழுதி - தனது எதிர்ப்பை முதலமைச்சர் பழனிசாமி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும்; “உயர்சிறப்பு அந்தஸ்து”க்கு வழிவிடும் துணைவேந்தர் கடிதத்திற்குத் துணைபோகும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் சட்ட முன்வடிவைத் தமிழக ஆளுநர் நிராகரித்திட வேண்டும் என்றும்; வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் காவு கொடுக்க முயற்சிக்கும் துணைவேந்தர் கடித விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு கால தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” என்று அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.