அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது பதவிக் காலத்தில் உயர்கல்வித் துறையைக் காப்பாற்றவில்லை என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார். 

தருமபுரி மாவட்ட திமுக சார்பில் 'தமிழகம் மீட்போம்' தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் காணொலி வாயிலாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். “தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் உயர்கல்வித் துறைக்கு அமைச்சர். அவர் பெயர் கே.பி.அன்பழகன். ஆனால், அவரால் உயர் கல்வித்துறைக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டுள்ளதா? குறைந்தபட்சம் உயர் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்றாவது அவருக்குத் தெரியுமா? அண்ணா பல்கலைக்கழகத்தையே தமிழக அரசுக்கே சொந்தமில்லாமல் மடைமாற்றம் செய்யத் துணைவேந்தர் சூரப்பா முயற்சி செய்தது, அன்பழகனுக்குக் களங்கமா, இல்லையா? இந்தக் காரியத்தை சூரப்பா அமைச்சருக்குத் தெரிந்து செய்தாரா? தெரியாமல் செய்தாரா?


உயர்கல்விச் செயலாளரின் ஒப்புதலோடுதான் இந்த முயற்சிகளைச் செய்ததாக சூரப்பா சொன்னார். அதற்கு அன்பழகனின் பதில் என்ன? அண்ணா பல்கலைக்கழகத்தை சூரப்பா கபளீகரம் செய்ய முயற்சிக்கிறார் என்று நான் அறிக்கை வெளியிட்ட பிறகே, திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல தமிழக அரசு மாட்டிக்கொண்டது. நான் மட்டும் அறிக்கை வெளியிடாமல் இருந்திருந்தால், அண்ணா பல்கலைக்கழகத்தை சூரப்பா சுருட்டிக் கொண்டு ஓடியிருப்பார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சூரப்பா சேர்த்ததை அமைச்சர் அன்பழகன் எதிர்த்தாரா?