திமுக தலைவராக 5ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின்...! அரசியல் களத்தில் சாதித்தது என்ன..?
திமுக தலைவராக மு.ஸ்டாலின் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த கால கட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார்.
திமுகவும் ஆட்சி அதிகாரமும்
திமுக ஆட்சி அதிகாரத்தை அதிமுகவிடம் 2011 ஆம் ஆண்டு இழந்தது. அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கு மிகப்பெரிய தோல்வியே கிடைத்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலையே ஏற்பட்டது. இதனையடுத்து தான் சந்தித்த உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த திமுக நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியையும் இழந்து எதிர்காலம் கேள்வி குறியாக இருந்தது. இதனையடுத்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று விடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மக்கள் நல கூட்டணியால் வாக்குகள் சிதறியதால் திமுக கூட்டணி 98 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனையடுத்து திமுகவின் ஆட்சி அதிகார கனவு கனவாகவே போனது
தோல்விக்கு பின் வெற்றி
இதனையடுத்து திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக தலைவர் கருணாநிதி இயற்கை எய்தினார். இதன் காரணமாக திமுக நிர்வாகிகளின் ஆதரவோடு திமுக என்னும் மாபெரும் இயக்கத்திற்கு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து தனது தீவிர செயல்பாடு காரணமாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த திமுகவிற்கு இந்த வெற்றி உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக உற்சாகம் அடைந்த திமுக தொண்டர்கள் அடுத்த வரும் ஆட்சி திமுக ஆட்சி தான் உறுதியாக நம்பினர். தொண்டர்களின் முழு ஒத்துழைப்போடு யாரும் எதிர்பார்க்காத வகையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி அ10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது திமுக.
மு.க.ஸ்டாலின் செயல்பாடு
இந்த வெற்றி திமுக வெற்றியல்ல மக்களுக்கான வெற்றி, அடித்தட்டு மக்களின் வெற்றி இந்த ஆட்சி சாதரன மக்களுக்கான ஆட்சி என மு.க.ஸ்டாலின் சூளூரைத்தார். திமுக தலைமையிலான அரசு பதவியேற்றதும் தலைமைசெயலகம் சென்ற ஸ்டாலின், ஆவின் பால் விலை குறைப்பு, பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், கொரோனா பாதிப்பால் தமிழக மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ 2000 வழங்க உத்தரவு, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவ மனையில் இலவச சிகிச்சை, என பல்வேறு அறிவிப்புகளுக்கு கையொப்பமிட்டு அதிரடி காட்டினார். இதனையடுத்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 95% இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வரலாறு படைத்தது.
இதையும் படியுங்கள்
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...! பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்