டாஸ்மாக் குறித்து ரஜினி வெளியிட்ட கருத்துக்கு ஆதரவு அளித்து ட்விட்டரில் வெளியானதாக தலவல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும் அவருடைய மகன் தயாநிதி அழகிரியும் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பெயரில் ட்விட்டரில் கருத்துகள் வெளியாகிவருகின்றன. டாஸ்மாக் விஷயத்தில் எடுபுடி அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அழகிரி ட்விட்டரில் தெரிவித்ததுபோல தகவல் வெளியானது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது குறித்து ரஜினி தெரிவித்த கருத்தை அழகிரி ஆதரித்ததுபோல், ‘உண்மையை உரக்கச் சொன்னீங்க நண்பா’ என்ற கருத்து வெளியானது. இதை பலரும் செய்தியாகவும் வெளியிட்டிருந்தனர்.

 
இந்நிலையில் இந்தச் செய்திகளை மறுத்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும் அவருடைய மகன் தயாநிதி அழகிரியும் விளக்கம் அளித்துள்ளனர். அழகிரி வெளியிட்டுள்ள  விளக்கத்தில், “ரஜினியின் கருத்தை நான் ஆதரிப்பது போன்று என் படத்தோடு சமூக வலைதளங்களில் சிலர் பரப்பிவருகிறார்கள். அது குறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் எந்த கணக்கும் இல்லை. அதை நான் பயன்படுத்தவும் இல்லை” என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.


இதேபோல் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் பதிவில் கடிதம் மூலம் வெளியிட்டுள்ள பதிவில், “ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக ஊடகங்களிலும் எனது தந்தை மு.க.அழகிரி இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். அவரது பெயரில் இயங்கும் எல்லாக் கணக்குகளும் போலியானவை. இந்தப் பிரச்சினையை ஏற்கெனவே ஒருமுறை எதிர்கொண்டு பதில் சொல்லியும் இருக்கிறேன். இதுபோன்ற முறையற்ற செயல்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தலைவர்கள் சமூக ஊடகங்களில் பகிரும் விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அவர்கள் சொல்வதைப் போல ஒரு மாயத்தை உண்டாக்கக் கூடாது. எனது தந்தையின் அலுவலகத்திலிருந்து வீட்டிலிருந்தோ எந்த கணக்குகளும் இயக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.