தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட எடுபுடி அரசு முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி காட்டமாக விமர்சித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால், ஊரடங்கில் மத்திய அரசு தளர்வு அறிவித்து மதுக்கடைகளைத் திறக்க அனுமதி அளித்தது. மேலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து, அதைக் காரணம் காட்டி தமிழக அரசும் டாஸ்மாக் கடைகளைத் திறந்தது. இதை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கில், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கருத்து  தெரிவித்துள்ளார். கடந்த 7-ம் தேதி மு.க. அழகிரி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “கொரோனா காரணமாக சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில், மே7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கபடும் என்ற அறிவிப்பை  வன்மையாக கண்டிக்கிறோம். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது.” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மு.க. அழகிரி இன்று வெளியிட்ட பதிவில், “ஊரடங்கு உள்ள வரை மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.  நிரந்தரமாக மூட எடுபுடி அரசு முடிவெடுக்க வேண்டும்.” என்று அழகிரி விமர்சித்துள்ளார்.