மாவட்ட மக்கள் 'வாழுறீங்களேடா! வாழ்ந்தா….கோவைக்காரனா வாழணும்டா' என்று பொறாமையில் பொசுங்குகின்றனர்
கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து தொடர்ந்து நான்கு நாட்களாக கோவை மாவட்ட மக்களை விமர்சனத்தில் வெளுத்து வாங்கினார்கள் மற்ற மாவட்ட மக்கள். குறிப்பாக சென்னை மற்றும் தெற்கு தமிழக மக்கள் கோவை வாசிகளை திட்டி தள்ளினர். காரணம்? கொங்கு மண்டலத்தில் மட்டும் அ.தி.மு.க. அதிக இடங்களில் ஜெயித்திருந்தது. அதிலும், கோவை மாவட்டத்தில் இருக்கும் பத்து தொகுதிகளில் ஒன்று கூட தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கவில்லை. ஒன்பதில் அ.தி.மு.க.வும், ஒன்றில் அதன் கூட்டணியான பா.ஜ.க.வும் வென்றிருந்தன.
ஆனால் சென்னை மண்டலம், திருச்சி மண்டலம், தெற்கு மண்டலத்து மக்கள் கொங்கு மண்டல மக்களை, அதிலும் குறிப்பாக கோவை மாவட்ட மக்களை, ‘டேய் என்னாங்கடா உங்க டேஸ்ட்டு? அடேய் கோவையன்ஸ் நீங்க மட்டும் ஒரு தினுஷா முடிவு பண்றீங்களே’ என்று கலாய்த்துக் கொட்டினர்.
இந்நிலையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேலைகள் துவங்கியதுமே கோவை மக்களை பார்த்து மற்ற மாவட்ட நெட்டிசன்கள் ‘டியர் கோவையன்ஸ் எதையும் யோசிச்சு முடிவெடுங்க. நீங்க பாட்டுக்கு ஒரு ரூட்ல போகாதீங்கடா’ என்று கலாய்ப்பாக ஒரு கோரிக்கை வைத்தனர்.
அதேப்போல் மற்ற எந்த மாவட்டத்தையும் விட கோவையில் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு கட்டி ஏறியது. அதிலும் கோயமுத்தூர் மாநகராட்சிக்கான தேர்தல் கண்களில் பூச்சி பறக்கவிட்டது. கவுன்சிலர் சீட் வாங்குவதில் துவங்கி, மேயர் பதவிக்கு டிக் அடிக்கப்படுவது வரையில் மூன்று முக்கிய கட்சிகளிலும் பொட்டிகள் பறந்தன. மற்ற எந்த மாவட்டத்தையும் விட கோயமுத்தூர் மாவட்டத்தில் தான் பணப்புழக்கம் பட்டையை கெளப்பியதாம்.

அதாவது தேர்தல் வாக்குப்பதிவு நாள் மாலை வரையிலுமே கூட வாக்காளர்களை ‘கவனித்து’ பூத்துக்கு அனுப்பும் வைபவம் நடந்திருக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மட்டுமில்லாமல், தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஒரு கட்சியும் பணப்பட்டுவாடாவில் இறங்கியது என்பதுதான் திகிலடிக்கும் விஷயம்.
கோவை மாநகராட்சியின் பல வார்டுகளிலும், சில நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் ஒவ்வொரு வாக்காளருக்கும் மூன்று பெரிய கட்சிகளில் இருந்தும் கலெக்ட்டான மொத்த தொகை சர்வசாதாரணமாக பதினெட்டாயிரம் முதல் இருபதாயிரம் வரையில். அதாவது பத்தாயிரம் + ஐந்தாயிரம் + மூவாயிரம் என்று துவங்கி அதிகப்பட்டதாம். அந்த வகையில், ஒரு குடும்பத்தில் நான்கு வாக்குகள் இருந்தால் அக்குடும்பத்தின் இந்த தேர்தல் வருமானம் மட்டும் சர்வசாதாரணமாக எண்பதாயிரம் ரூபாய்! இது போக சில பல பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இதனால்தான் கோவைக்காரன்களை பார்த்து மற்ற மாவட்ட மக்கள் ’அடங்கொன்னியா வாழுறீங்களேடா! வாழ்ந்தா….கோவைக்காரனா வாழணும்டா’ என்று பொறாமையில் பொசுங்குகின்றனர்.
கோவை மாவட்ட மக்களோ ‘கோவைன்னா கெத்து மட்டுமில்லடா, சொத்தும் கூட’ என்று கூலர்ஸை ஏற்றிவிடுகின்றனர்.
வாழ்கசனநாயகம்!
