அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தினுள் துயில் கொள்ள செய்தாகிவிட்டது. இனி மீண்டும் 40 ஆண்டுகள் கழித்துதான் அவரை எழுப்பிட வேண்டும்! அதற்குள் யாரெல்லாம் மரிக்கப் போகிறார்களோ, யாரெல்லாம் அதிகாரத்தில் இருப்பார்களோ, உலகம் என்னாகுமோ? இதையெல்லாம் கண்டும் காணாது பல்லாண்டுகள் அத்திவரதர் துயில்வார்...என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால் தமிழகத்தின் தலைமை செயலகமான கோட்டையிலோ  ‘அமைச்சரின் பதவியை காவு வாங்குகிறார் அத்திவரதர்’ எனும் பேச்சு மிக மிக பலமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒரு அமைச்சர் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கோட்டையில், தன் துறை அலுவலகத்தில் ரகசியமாய் சிறப்பு பூஜைக்கும் தயார் செய்துவிட்டு, அத்திவரதர் கோபம் தணிவாரா இல்லை தன்னை அடிச்சு தூக்குவாரா? என்று கிடுகிடுத்துக் கிடக்கிறாராம். அதாவது தமிழக முதல்வர் எடப்பாடியார் ஃபாரீன் ட்ரிப் முடிந்து திரும்பிய சில நாட்களில் தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கும்! என எதிர்பார்க்கப்பட்டது. 

முதவ்லரும் தமிழகம் வந்துவிட்டார். எதிர்பார்த்தபடியே அமைச்சரவை குறித்த சில முக்கிய ஃபைல்களை பார்த்திருக்கிறார். அதன்படி குறைந்தது இரண்டு அமைச்சர்களின் பதவி பறிபோகும், சுமார் நான்கு அமைச்சர்கள் புதிதாய் உள்ளே வருவார்கள் என்று தகவல். பறிபோகும் இரு அமைச்சர்களும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோராக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று கோட்டைப் பக்கம் தகவல் தடதடக்கிறது. 

அதிலும் சேவூர் ராமச்சந்திரனின் பதவி பறிபோக காரணமாக இருக்கப்போவது அத்திவரதர் விவகாரமே என்கிறார்கள். இதுபற்றி விரிவாய் பேசும் கோட்டையின் சில முக்கிய அதிகாரிகள் “அதாவது  சர்வதேச இந்து ஆன்மிக பிரியர்களை, மடாதிபதிகளை, தலைவர்களை தமிழகம் நோக்கி திரும்ப வைத்தது இந்த அத்திவரதர் நிகழ்வு. பெரும் வரலாற்று முக்கியத்துவமுடைய அந்த நிகழ்வை இந்து அறநிலையத்துறை மிகவும் அலட்சியமாக கையாண்டிருக்கிறது என்பதே முதல்வரின் குற்றச்சாட்டு. 

குறிப்பாக பலப்பல லட்சம் இந்துக்கள் பொது தரிசனத்தில் பல மணிநேரம் தவியாய் தவித்து, உருப்படியான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியில்லாமல் தவியாய் தவித்து, சிலர் மின்சாரம் தாக்கியும் நெரிசலிலும் இறந்து, பலர் காயம்பட்டு என்று இந்த நிகழ்வு பல நெகடீவ் அம்சங்களில் சிக்கி விமர்சனப்பட்டது. எதிர்கட்சிகளும், ஆன்மிக பெரியோரும் இந்த அலட்சிய செயலுக்காக அரசை சபித்துக் கொட்டினர். சங்கடப்பட்ட பல லட்சம் மக்களோ வருந்திக் குமுறினர். இவையெல்லாமே தேர்தல் வேளைகளில் அ.தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவை தரும். 

தேர்தல் பிரசார வேளைகளில் தமிழகமெங்கும் அத்திவரதர் தரிசனத்தின் போது ரெளடிகள், நடிகைகள் அத்திவரதர் சிலையின் அருகிலேயே நிற்க வைக்கப்பட்டதையும், உண்மையான எளிய பக்தர்கள் பல அடிக்கு அப்பால் அவஸ்தைப்பட்டதையும் எதிர்க்கட்சிகள் மேடைக்கு மேடை கிழிக்க இருக்கின்றன. எனவே பலப்பல லட்சம் வாக்குகளையுடைய ஏழை மற்றும் நடுத்தர இந்து வாக்கு வங்கியானது அ.தி.மு.க.வுக்கு எதிராக போக இருப்பது உறுதி என உளவுத்துறை தகவல் சொல்லியுள்ளதாம். 

இது போக இந்து அறநிலையத்துறை சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்குவது தொடர்கதையாகி உள்ளது. மதுரையில்  சீனியர் அதிகாரி பச்சையப்பன் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியது என இத்துறையின் அவலங்களை முதல்வரால் சகிக்க முடியலையாம். எனவே அமைச்சரின் பதவிக்கு ஆபத்து வரலாம். இதற்கு முக்கிய காரணம் அத்திவரதரின் கோபமாகவே இருக்கப்போகிறது!” என்கிறார்கள். உண்மையாகவா அத்தி?