மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று துவங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. இதில் 40 தொகுதிகளில் 37 இடங்களை வென்றது. பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. தி.மு.க. கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது.  

தற்போது ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையுடன் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. அதேபோல் கருணாநிதி மறைவையடுத்து திமுக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இரு கட்சிகளுமே தங்களின் பலத்தை காட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இதனால் தமிழக அரசியல் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பை எட்டியுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸிட், இந்திய முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. 
 
ஆளும் கட்சியான அ.தி.மு.க., பாமக, தேமுதிக, தமாகா, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து ரகசியமாக பேசி வருகிறது. இந்நிலையில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து இன்று முதல் அதிமுக விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. இந்த விருப்ப மனுக்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

விருப்ப மனு பெற விரும்புவோர் ரூ.25,000 செலுத்தி மனுக்களை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம். பிப்ரவரி 10-ம் தேதி மாலை 5 மணி வரை தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.