நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றிக்கு மோடியும், எங்கள் டாடியும் தான் காரணம் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம், திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். கிருஷ்ணசாமி, மாவட்டச் செயலாளர் நாசர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்;- சினிமாவும், அரசியலும் தனக்கு இரண்டு கண்கள் எனக்கூறுவது தவறு என்றும் நடிப்பை மனதளவில் மட்டுமே செய்து வருவதாகவும், அரசியல் என்பது தனது ரத்தத்தில் ஊறியது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், நடந்து முடிந்து மக்களவைத் தேர்தலில் நான் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்ததால்தான் 100 விழுக்காடு வெற்றியை, இந்தியாவையே திரும்பி பார்க்கக் கூடிய அளவுக்கு வெற்றியை தமிழ்நாடு மக்கள் தந்தார்கள் என்கிறார்கள். கண்டிப்பாக, அது என்னுடைய பரப்புரைக்குத் தந்த வெற்றி இல்லை. அந்த வெற்றிக்கு காரணம் இரண்டு நகர்கள். ஒன்று மோடி, இன்னொன்று எங்கள் டாடி. இந்த வெற்றி நம்முடைய தலைவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் நான் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.