தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு நாளை தொடங்க உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என திமுக  தனது மனுவில் கூறியுள்ளது. வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. 

திமுகவின் புதிய மனு மற்றும், 5 புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது உரிய சட்ட முறைகளை கடைபிடிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மாவட்ட தேர்தல் அதிகாரிதான், வார்டு மறுவரையறை அதிகாரியாகவும் உள்ளார் என்றும் கூறினார்.

ஆனால், 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்,  புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பின் அவற்றில் தொகுதி மறுவரையறை செய்ய தேவையில்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்படும் போதுதான் புதிய மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை செய்ய முடியும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தரப்பு வழக்கறிஞர், வார்டு மறுவரையறை செய்த பின்புதான் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படவில்லை என்றும் கூறினார்.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு பணிகளை சரியாக செய்யவில்லை என்றால் குழப்பம் ஏற்படாதா? என கேள்வி எழுப்பினர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது, 2021 புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகே மீண்டும் மறுவரையறை செய்ய முடியும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பழைய தொகுதி மறுவரையறை பணிகளை தான் மீண்டும் கொடுத்திருக்கிறோம் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், எதற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன? பழைய நிலையே தொடரும் என்றால் எப்படி புரிந்து கொள்வது? மூன்று மாவட்டங்களுக்கு ஒரே மாவட்ட பஞ்சாயத்தா? இத்தனை ஆண்டுகள் ஏன் தேர்தல் நடத்தாமல் இருந்தீர்கள்?  என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். 

தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தபிறகு நீதிமன்றத்தினால் தேர்தலை ரத்து செய்ய முடியாது. ஆனால், தேவைப்பட்டால் எங்களால் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, தொகுதி மறுவரையறை செய்யப்படவில்லை என நினைத்தால் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவையுங்கள் என தெரிவித்தது.

இந்த சூழலில், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில், நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இதனால், உள்ளாட்சி  தேர்தலுக்கு தடை விதிக்கப்படுமா? அல்லது தேர்தல் நடத்த அனுமதி  கிடைக்குமா? என்பது நாளை தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.