தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சி, 123 நகராட்சி, 529 பேரூராட்சிகள் உள்ளன. அதுபோல கிராமப் பகுதிகளில் 12,524 ஊராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றிய அமைப்புகளும் இருக்கின்றன.

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தவர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. நீதிமன்ற வழக்குகள், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டுகளை மறுவரையறை செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. தனி அதிகாரிகள் மட்டும் நிர்வாகத்தை கவனிப்பதால், உள்ளாட்சி நிர்வாக பணிகளில் தொய்வும் ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது.

அதனால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி  ஒன்றில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நவம்பர் மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.

தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து வருவதாகவும், அப்பணிகள் முடிவடைந்ததும் நவம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.