சட்டவிதிகள் மற்றும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றித்தான், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேநேரத்தில் மாநகராட்சி உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதற்கான வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. 

இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதியதாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உள்ளது. 

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முறையான சட்ட விதிகளின்படியே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. முழுமையான தொகுதி வரையறை செய்யப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரிடமும் கருத்துகளை பெற்றே தொகுதி வரையறை செய்திருக்கிறோம் சட்ட விதிகள் மற்றும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றித்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.