உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை டிசம்பர் 2-ம் தேதி வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கால் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதன்பிறகு கஜா புயல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. 

இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தக்கோரி வழக்கறிஞர் சி.ஆர். ஜெயசுகின், திமுக கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், தமிழக அரசு ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு பல முறை உச்சநீதிமன்றம் அவகாசம் தந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பாக இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில், உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஆகையால் டிசம்பர் 2-ம் தேதி வரை கால அவகாசம் தர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் டிசம்பர் 13-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்துள்ளது.