தமிழகத்தில் ஆகஸ்ட் மாத இறுதியில் வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து தேர்தலுக்கான 
அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாலும், அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வருவதாலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது தாமதமாகி வருகிறது. 

இதனிடையே முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் ஜூலை 2-வது வாரத்தில் முடிய வாய்ப்பு இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் கூறியுள்ளது. 

மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குச்சீட்டு முறையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தலில் விவிபேட் பயன்படுத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.