உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டிருந்தால் மாபெரும் வெற்றி அடைந்திருக்கும் என முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. பெரும்பாலான மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. 247 மாவட்ட கவுன்சிலர், 2110 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களை, திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணியில், பாமக, தேமுதிக, பாஜக மற்றும் இதர கட்சிகள் உள்ளன. மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் 213 இடங்களையும், 1797 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களையும் இந்த கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக 6 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களையும், 87 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களையும் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்ற கருத்து கேட்பு கூட்டம் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், எச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம் மற்றும் டெல்லி பிரதிநிதிகள் நரசிம்மராவ், சிவப்பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த கூட்டத்தில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் பாஜக காலம் துவங்கி விட்டது, இதற்கு உதாரணம் தான் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள். தமிழகத்தில் பாஜகவிற்கு மிக பெரிய வரவேற்பு உள்ளதை இந்த தேர்தல் காட்டுகிறது என்றார். அத்துடன் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய அவர், தமிழக மக்கள் பாஜகவிற்கு கொடுத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம். கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருந்தாலும், அதன் செல்வாக்கை காட்டி இருக்க முடியும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.