உள்ளாட்சி தேர்தலில் 30 சதவீத இடம் தேமுதிகவிற்கு தரப்பட உள்ளதாகவும் அடுத்த ஆட்சியை தேமுதிக தான் அமைக்க உள்ளதாகவும் சுதீஷ் சீரியசாக பேசி உள்ளார்.

திருப்பூரில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேமுதிகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த், பிரேமலதா, விஜயபிரபாகரன் பேசினர். ஆனாலும் கூட எல்.கே.சுதீஷின் பேச்சும் பலராலும் கவனிக்கப்பட்டது. காரணம் அந்த கட்சியின் அரசியல் முடிவுகளை எடுப்பதில் சுதீசுக்கு முக்கிய பங்கு உண்டு. 

அந்த வகையில், தேமுதிக தொடங்கி 15 வருடங்கள் ஆன நிலையில் கடந்து வந்த பாதையை பட்டியலிட்டார். மேலும் 15 வருடங்களில் அதிக தேர்தலில் போட்டியிட்ட கட்சி தங்கள் கட்சி தான் என்றார். மேலும் கேப்டன் எதிர்கட்சி தலைவராக அமர்ந்ததை கூறி நெகிழ்ந்தார். மேலும் கட்சி தற்போதும் உயிர்ப்புடன் உள்ளதாகவும் அடுத்த ஆட்சியை தேமுதிக தான் அமைக்கும் என்றும் கூறினார்.

அதோடு மட்டும் அல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிடும் 30 சதவீத இடங்களிலும் வெற்றி உறுதி என்றார். ரசிகர் மன்றமாக இருக்கும் போதே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கேப்டன் ரசிகர்கள் வெற்றி பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார். இப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சுதீஷ் கூறினாலும் அவர் பேசி முடித்த போது தொண்டர்களுக்குள் உள்ளேயே சில சந்தேகங்கள் எழுந்தன.

அதிமுக கூட்டணியில் இருக்கும் நாம் எப்படி அடுத்த ஆட்சி அமைக்க முடியும், உள்ளாட்சி தேர்தலில் 30 சதவீதத்தை நமக்கே கொடுத்துவிட்டால் அதிமுக எத்தனை சதவீதத்தில்போட்டியிடும் என்பது தான் அந்த கேள்விகள்.