தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.

உள்ளாட்சி அமைப்பு தொகுதிகள் வரையறுக்கப்பட்டதில் குளறுபடிகள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து குளறுபடிகள் அனைத்தும் நீக்கப்பட்டன. அதன் பிறகும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதம் ஏற்படுவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக மாநில தேர்தல் ஆணையத்தை விசாரித்து தேர்தல் தேதியை அறிவிக்க உத்தரவிட்டனர். அப்போது அக்டோபர் 30-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிப்போம் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது.

ஆனால் மாநில தேர்தல் ஆணையத்தால் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது மாநில தேர்தல் ஆணைய வக்கீல் பி.எஸ்.நரசிம்மன், “உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு சில பணிகள் செய்ய வேண்டியது உள்ளது. எனவே மேலும் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுகிறது” என்றார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்கவில்லை. ஏற்கனவே நீங்கள் ஒரு மாத கால அவகாசம் வாங்கி விட்டீர்கள் என்றனர்.

அப்போது தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக்மனு சிங்வி வாதாடுகையில், “தொகுதி வரையறை இன்னமும் முடியவில்லை. 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை இதுவரை செய்யப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதற்காக வேண்டும் என்றே மாநில தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதுபற்றி மாநில தேர்தல் ஆணையத்திடம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரித்தனர். அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய வக்கீல், “தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு உள்ளன. திட்டமிட்டபடி தேர்தல் தேதி அட்டவணை அறிவிப்பு ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த தகவலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் டிசம்பர் 13-ந்தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

இதையடுத்து டிசம்பர் 2-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.