உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேமுதிக, பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தற்போதே இட ஒதுக்கீடு குறித்து பேசி அதிமுகவிற்கு பீதி கிளப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க பணிகளும் முடிந்துவிட்டனர். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வியில் இருந்து மீள உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தான் சரி என்று அதிமுக நினைக்கிறது. 

இதனை அறிந்து தற்போதே தேமுதிக உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு 10 சதவீத இடங்கள் தேவை என்றும் ஒரு மேயர் பதவி கட்டாயம் என்றும் அதிமுகவிற்கு தூது அனுப்பியுள்ளதாக கூறுகிறார்கள். இதே போல் பாஜகவும் கூட மேயர், நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட பதவிகளில் 20 விழுக்காட்டை எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். 

பாமகவும் தனது பங்குக்கு சென்னை மேயர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் வட மாவட்டங்களில் முக்கியமான நகராட்சிகளை கோருவதாகவும் கூறுகிறார்கள். தேர்தல் அறிவிப்பிற்கு முன்தாகவே இடஒதுக்கீடு குறித்து பேசி முடித்துவிடுவது நல்லது என்று ராமதாஸ் தரப்பில் இருந்து எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்சுக்கு தகவல் வந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். 

இதே போல் சின்னச் சின்ன கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் கனவோடு அதிமுக தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு வருகிறார்களாம். அதே சமயம் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்களோ அம்மா இருந்தது போது எப்படி உள்ளாட்சி தேர்தலை தனியாக சந்தித்தோமோ அப்படித்தான் இப்போதும் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். 

மேலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிர்வாகிகளை கவனிக்க தவறினால் மிகப்பெரிய விபரீதம் ஏற்படும் கட்சிக்குள் பிரச்சனை வரும் என்றும் அவர்கள் தகவல் அனுப்பி வருகின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதை நினைத்து தற்போதே அதிமுக தலைமை பீதிக்கு உள்ளாகியுள்ளதாம்.