உள்ளாட்சித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள நிலையில் அது குறித்து இன்னும் பாஜக முடிவெடுக்கவில்லை என்று பொன்னார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அமைந்த கூட்டணியை அப்படியே சட்டமன்ற தேர்தல் வரை கொண்டு சென்றுவிட வேண்டும் என்பது தான் அதிமுக தலைமையின் விருப்பமாக உள்ளது. அதிலும் பாஜகவை எந்த சூழலிலும் விட்டுவிடக்கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளதாக சொல்கிறார்கள். தமிழகத்தில் சிக்கல் இல்லாமல் ஆட்சி தொடர பாஜகவின் ஆசி தேவை என்பதை எடப்பாடி நன்கு புரிந்து வைத்துள்ளார். இதனால் தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக எதிர்பார்ப்பது அதிகமாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் அவர்களை திருப்தி படுத்த முயற்சித்து வருகிறார்.

பாஜக நெல்லை மற்றும் கோவை என இரண்டு மாநகராட்சிகளை கேட்கிறது. ஆனால் ஒரு மாநகராட்சி கூட எந்த கூட்டணிக் கட்சிக்கும் கிடையாது என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. மாநகராட்சிக்கு பதில் பேரூராட்சிகளில் தாராளம் காட்ட அதிமுக தயாராக உள்ளது. ஆனால் இரண்டு மேயர்கள் என்பதில் பாஜகவும் பிடிவாதம் காட்டுகிறது. திரைமறைவில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணனிடம் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேர்தல் அறிவித்த பிறகு அது குறித்து பேசப்படும் என்று அவர் பதில் அளித்தார். தொடர்ந்து அதிமுகவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு தான் அந்த கூட்டணி, உள்ளாட்சித் தேர்தல் என்றால் புதிதாக பாஜக மேலிடம் முடிவெடுக்கும் என்று கூறி அதிர வைத்தார் பொன்னார்.

உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீட்டில் பிடி கொடுக்காத அதிமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பொன்னார் இப்படி ஒரு பேட்டி கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சரே கூறி வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரான பொன்னாரோ அது குறித்து முடிவெடுக்கவில்லை என்று பேசியிருப்பது கூட்டணிக்குள் உரசல் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.