தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வது தொடர்பான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலுக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. 

இது தொடர்பான தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்டவாரியாக வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்தும் வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு அதில் விடுப்பட்ட அனைவரையும் சேர்த்து திருத்தம் மேற்கொள்ளவும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டே உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவுற்ற நிலையில் பல்வேறு காரணங்களால் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை 5 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்த தாமதமானது குறித்து எதிர்க்கட்சிகள் ஆளும் அதிமுகவினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். 

இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் தமிழக தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், மாவட்டம், ஊராட்சி மற்றும் ஒன்றியங்கள் வாரியாக வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, தனியாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.