சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் என தமிழக பாஜக பொதுசெயலாளர் சீனிவாசன் கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையாகி சென்னை வந்த சசிகலாவிற்கு அமமுகவினர் வழி நெடுக கொடுத்த உற்சாக வரவேற்பு அரசியலில் பேசு பொருளாக மாறியது. அப்போது தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறிய சசிகலா, ஒரு தாய் பிள்ளைகள் இணைந்து செயல்பட வேண்டும், அதுவே என் விருப்பம் என தெரிவித்தார்.

இதனால் அதிமுக, அமமுக இணைப்பு நடக்கும், சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்ளப்படுவார் என அரசியல் ஆர்வலர்களால் பல யூகங்கள் பேசப்பட்டது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அமைச்சர்கள் சிலரும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அதிமுகவில் இடமில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டனர். 

இதையடுத்து சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இது குறித்த பேச்சுக்கள் அதிகமானது. பாஜக தரப்பில் அதிமுக, அமமுக இணைப்பு குறித்து பேசி வருவதாகவும் நிச்சயம் மாற்றம் இருக்கும் என அதனை விரும்பிய இரு தரப்பை சேர்ந்தவர்களும் எதிர்பார்த்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன் என்ற அறிக்கையின் வாயிலாக சசிகலா தனது அரசியல் விலகலை அறிவித்தார். சசிகலாவின் திடீர் அறிவிப்பு தமிழக அரசியல் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசிகலாவின் அறிவிப்புக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். 

இந்நிலையில், தமிழக பாஜக பொதுசெயலாளர் சீனிவாசன் கூறுகையில் சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அதேபோன்று தினகரனும் அரசியலை விட்டு ஒதுங்கும் முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.