பிஜேபி மாநிலத் தலைவர் எல். முருகன் சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவத்தை வைத்து, அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் திமுகவும், காங்கிரஸூம், விடுதலை சிறுத்தை கட்சியும் ஜாதி அரசியலை முன்னெடுக்க எத்தனித்து இருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. அம்பேத்கார் ஒரு சாதிக்கு கட்டுபட்டவர் கிடையாது. அவர் உலகத் தலைவர். மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குண்டர்கள் திட்டமிட்டு பிஜேபி நிர்வாகிகள் மீது தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். 

எங்கள் வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போதும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தினார்கள். நேற்றைய முன்தினம் அம்பேத்கார் பிறந்த நாள் அன்று அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது திட்டமிட்டு விடுதலை சிறுத்தைக் குண்டர்கள் தாக்குதல் நடத்தி உள்ளார்கள். சமூக விரோதிகளை அடையாளம் கண்டு மதுரை காவல்துறையினர் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி இனி அரசியல் செய்ய முடியாது. அந்தக் கட்சியின் இளைஞர்கள் ஏராளமானோர், வடக்கு மாவட்டங்களில் பாரதீய ஜனதா கட்சியில் தங்களைத் தொடர்ந்து இணைத்து வருகிறார்கள். 

அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சாதி அரசியலை தற்போது கையில் எடுத்து இருக்கிறது. அரக்கோணம் இரட்டைக் கொலையில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து இருக்கிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த சம்பவத்தை வைத்து, அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் திமுகவும், காங்கிரஸூம், விடுதலை சிறுத்தை கட்சியும் ஜாதி அரசியலை முன்னெடுக்க எத்தனித்து இருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது . இவ்வாறு அவர் கூறினார்.