மக்களை ஏமாற்றி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
மக்களை ஏமாற்றி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. இதுக்குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நிழலின் அருமை வெயிலில் தெரிவது போலவும், நேர்மையின் பெருமை நிம்மதியில் அறியப்படுவது போலவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் அருமையும், பெருமையும் விடியா பொழுதாக, முடியா இருளாக விளங்கும் திமுக ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாய் தெரியத் தொடங்கி இருக்கும் காலகட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழகத்தின் வெற்றி உறுதி, உறுதி என்று எட்டுத் திக்கிலும் இருந்து மக்களின் மன ஓசை எதிரொலிக்கிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்புகள் இருந்தும், கடந்த காலங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொற்கால ஆட்சிகளில், மக்களுக்கு அளிக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளைப் பற்றி அறிந்திருந்தும், திறமையும், தியாக உள்ளமும் இல்லாத காரணத்தால் திமுக அரசு, வாக்களித்த தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்; நீட் தேர்வு உடனடியாக ரத்து; நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி என்றெல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசி, மக்களை மதிமயங்கச் செய்யும் பிரச்சாரங்களால் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடித்த திமுக, இன்று ஆட்சி நடத்துவது மக்களின் நலன் காக்க என்பதை மறந்துவிட்டு, மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்; தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் என்று புரட்சித் தலைவர் பாடி, சுட்டிக்காட்டியதைப் போல, தங்கள் குடும்பங்களை வளப்படுத்திக்கொள்ளும் செயல்களில் ஈடுபட்டிருப்பது ஊர் அறிந்த உண்மை. தமிழ் நாட்டின் புலனாய்வு பத்திரிகைகள் வாரந்தோறும் பல புள்ளி விவரங்களுடனும், சில புள்ளிகளைப் பற்றிய விவரங்களுடனும், உறுதியான ஆதாரங்களுடனும், திமுக ஆட்சியின் துயரங்களையும், ஊழல்களையும் பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றன.

கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?. தமிழ் நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக அளிக்கப்பட்ட பொருட்களின் தரமற்ற தன்மையையும், பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு ரொக்கத் தொகை இந்த ஆண்டு மக்களுக்கு மறுக்கப்பட்டு இருப்பதையும், இந்த ஒரு திட்டத்தில் மட்டும் பலநூறு கோடி ரூபாய் திமுகவினரால் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதையும் கண்டு, தமிழ் நாட்டு மக்கள் திமுக அரசை தண்டிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டிருப்பதையும், ஊழல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டு இருப்பதையும், மாநிலத்தின் இயற்கை வளங்களை சூரையாடுவதையும் பார்த்து, இவர்கள் திருந்தவே மாட்டார்களா? என்று எல்லோரும் வேதனை அடைந்திருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொற்கால ஆட்சி நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகளை நினைவுபடுத்தி, அந்த நாள் மீண்டும் எப்போது வரும்? என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வழியில் ஆட்சி நடத்திய நம் இதயம், எப்பொழுதும் ஏழை, எளியோருக்காகவே துடித்துக் கொண்டிருக்கிறது. தவி தவிக்கிற ஏழைக்காக திட்டம் போடனும் - பொருளை சரிசமமா பங்கு வைக்க சட்டம் போடனும் என்று புரட்சித் தலைவர் பாடிய கன்னித்தாய் படப் பாடலை ஆட்சி முறைக்கான இலக்கணமாய் வைத்து நடைபெற்றதல்லவா கழகத்தின் ஆட்சி ? வெள்ள நிவாரணத்திற்கு ரொக்கமாக உதவித் தொகை, புயல் நிவாரணங்களின் போது போர்க்கால நடவடிக்கைகள், கொரோனா பெருந்தொற்றால் மக்கள் முடங்கிக் கிடந்தபோது ரொக்கம், மளிகைப் பொருள் தொகுப்பு, தமிழர் திருநாளாம் தைப் பொங்கலைக் கொண்டாடி மகிழ பரிசுத் தொகுப்பு பொருட்களுடன் ரொக்கப் பரிசு என்று நாட்டுக்கே முன்னோடியாக நடைபெற்றதல்லவா நம் கழகத்தின் ஆட்சி, மருத்துவப் படிப்பில் ஏழை, எளிய கிராமப்புற அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களுக்கு கழக அரசு வழங்கிய 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் விளைவாக இன்று, கட்டடத் தொழிலாளர்களின் மகள்களும், சுமை தூக்கும் தொழிலாளர்களின் மக்களும், சாலையோரக் கடை நடத்துவோரின் பிள்ளைகளும் கம்பீரமாக மருத்துவக் கல்லூரிகளுக்கு படிக்கச் செல்வதைப் பார்க்கையில் இதயம் ஆனந்தக் கூத்தாடுகிறது.

இதைப் போன்ற அமைதிப் புரட்சிகள் வழியாக சமத்துவ, சமதர்ம, சமுதாயத்தைப் படைத்திடத்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர், தம் புகழ் வாய்ந்த கலை வாழ்வை புறந்தள்ளிவிட்டு பொது வாழ்வுக்கு வந்தனர். பேரறிஞர் அண்ணாவுக்கும், ஈரோட்டுப் பகலவன் தந்தைப் பெரியாருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் சமுதாய மாற்றம் இதைவிட வேறு ஏதும் இருக்குமா? ஜனநாயகத்தின் வழியாகவும், தேர்தல்கள் மூலமாகவும் செய்து முடித்திட அரசியல் சட்டம் கனவு கண்டதும் இத்தகைய மகோன்னதமான புரட்சிகளைத் தானே! தமிழ் நாட்டு மக்களின் நலன்கள் காப்பாற்றப்படவும்; ஏழை, எளிய, தாய்மார்கள், சகோதரிகளின் வாழ்வு உயரவும்; வாட்டம் போக்கிடவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் உண்மையாய் உழைக்கும் என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். சுடர் விளக்கே ஆயினும் தூண்டுகோல் வேண்டுமல்லவா? கழக உடன்பிறப்புகள் உடனடியாக தேர்தல் பணிகளில் இறங்குங்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் மகத்தான சாதனைகளை மக்களுக்கு மீண்டும், மீண்டும் எடுத்துக் கூறி வாக்காளர்களின் ஆதரவுகளைப் பெறும் வகையில் பணியாற்றுங்கள். நம்மிடையே கருத்து வேறுபாடுகளோ, ஒரு சில பிணக்குகளோ இருந்தால், மக்கள் நலனுக்காகவும், கழகத்தின் வெற்றிக்காகவும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையாகப் பணியாற்றுங்கள். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது என்பது நாம் அறியாததல்ல. போட்டியில் இருப்பது தனி மனிதர்கள் அல்ல. இரட்டை இலை தான் போட்டியிடுகிறது என்பதை மனதிற்கொண்டு, தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடுங்கள் என்று உங்களை கரம்பிடித்து கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
