வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாற்றை படைக்கப் போகிறது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். 

நாகையில் தனியார் கல்லூரி வெள்ளிவிழா ஆண்டு நுழைவு வளைவினை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என ஆசைப்படுவதில் தவறில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் முதல்வர் என கூறிக் கொள்வதிலும் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் யாரை விரும்புகிறார்கள் யாருடைய ஆட்சி வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாற்றை படைக்கப் போகிறது என நம்பிக்கை தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் எனக்கூறும் ஸ்டாலின் ஏன் 34 தொகுதிகளை சேர்க்காமல் விட்டு விட்டார் என கேள்வி எழுப்பினார். ஸ்டாலினின் பேராசையை, நிராசையாக மாற்றுவோம் எனவும் கூறியுள்ளார்.