மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகளுக்கு ஆதரவாகத் தொழிற்சங்கங்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பாக இன்று நாடு முழுவதும் 'பாரத் பந்த்' நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, இன்று காலை தொடங்கிய 'பாரத் பந்த்'- க்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் அரசியல் கட்சியினர் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது! உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள்! உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை! விவசாயிகளுக்காக நடைபெறும் 'பாரத் பந்த்' வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்!' என்று பதிவிட்டுள்ளார்.