தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகியோருக்கு தலா 7 அடி உயரமுள்ள 400 கிலோ எடையுள்ள முழு நீல வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளை முதல்வரும், துணை முதல்வரும் ஜனவரி 30-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளனர். இந்த விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தொற்று பரவலை பொருட்படுத்தாமல் கடந்த 8 மாதங்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்துவருகிறார். ஆனால், திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் அறைக்குள் முடங்கிக் கிடந்தார். இன்று கிராமசபை கூட்டம் என்ற பெயரில் பொய்ப் பிரச்சாரங்களை செய்து வருகிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான் என்பதை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை.
கடந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்திருந்தது. கடுமையான மின்வெட்டு, விலைவாசி உயர்வு, நில அபகரிப்பு என்று நடந்த சம்பவங்களை எல்லாம் மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. தேர்தல் வாக்குறுதியாக இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று கூறி அப்பாவி மக்களின் நிலத்தை அபகரித்ததை யாரும் மறக்கவும் இல்லை; மன்னிக்கவும் இல்லை. எனவே, ஸ்டாலின் எவ்வளவு பொய்ப் பிரச்சாரங்களை செய்தாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க. ஸ்டாலினால் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வர முடியாது. அதிமுக நிச்சயமாக ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.” என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.