’அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து தமிழக அரசை சஸ்பெண்ட் செய்ய முடியும். தேர்தல் வந்தால் டிஸ்மிஸ் செய்ய முடியும்’ என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

போராட்டம் குறித்து திருச்சியில் பேசிய அவர், ‘நாங்களே இந்த அரசை சஸ்பெண்ட் செய்ய முடியும். தேர்தல் வந்தால் நாங்களே இந்த அரசை டிஸ்மிஸ் செய்ய முடியும். கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் இன்று முதலமைச்சர். குட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் இப்போதைய தலைமை செயலாளர். இவர்கள் இருவருமே கொடநாடு வழக்கை மூடி மறைப்பதற்காக எங்கள் போராட்டத்தை பயன்படுத்துகிறார்கள் என்று நான் சொல்கிறேன்.

எங்கள் போராட்டத்தை பெரிது படுத்திக் கொண்டே போனால் கொடநாடு வழக்கு பேச்சு அடிபட்டு போகும் என்பதால் இழுத்தடிக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக இந்த நிலைதானே தொடர்ந்து வருகிறது. தேர்வெழுதிய ஆசிரியர்கள் 82 ஆயிரம் பேர் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். தேர்வெழுதியவர்கள் 7 ஆண்டுகளுக்குள் பணிக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் மீண்டும் அவர்கள் தேர்வெழுத வேண்டும். 

அப்படிப்பட்ட சூழல் 2013ல் தேர்வெழுதியவர்களுக்கு அடுத்த மாதத்துடன் முடிகிறது. அவர்களுக்குக் கூட வேலை அளிக்கவில்லை. 7500 ரூபாய் சம்பளத்திற்கு வாருங்கள் என அழைத்தார்கள். அவர்கள் வரமாட்டேன் என சொல்லி விட்டார்கள். அதற்கு பிறகு 10 ஆயிரம் தருகிறேன் வாருங்கள் என்று சொன்னார்கள். நீங்கள் தரும் 10 ஆயிரமும் வேண்டாம் எனச் சொல்லி மறுத்து விட்டார்கள்’’ என அவர் தெரிவித்தார்.