ஓராண்டுக்கும் மேலாக அமைதியாக இருந்த மு.க.அழகிரி தானும் கலைஞர் மகன் தான் நினைத்ததை முடிப்பவன் நான் என்பது அனைவருக்கும் தெரியும் என்று பஞ்ச் வைத்து பேசியிருப்பது மதுரை மட்டும் அல்ல தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஓராண்டுக்கு  தனது ஆதரவாளர் திருமண விழாவில் கலந்து கொண்ட மு.க.அழகிரி அரசியல் எதுவும் பேசவில்லை. செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகளை கேட்ட போதும் கூட, அரசியல்குறித்துஅவர் வாய் திறக்கவில்லை. அதே சமயம் அவ்வப்போது ரஜினிக்கு ஆதரவாக அழகிரி கருத்து தெரிவித்து வந்தார். இதற்கு காரணம் அழகிரியும் – ரஜினியும் நெருங்கிய நண்பர்கள் என்பது தான். மேலும் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அழகிரிக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்று கூட தகவல்கள் வெளியாகின.

ஆனால் அரசியல் விஷயங்களில் இருந்து அறவே அழகிரி ஒதுங்கியிருந்தார். நாடாளுமன்ற கூட்டணி பேச்சுவார்த்தை சமயத்தில் கூட அழகிரியின் மகன் துரை தான் கிண்டல் செய்து ட்வீட் செய்து வந்தார். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் கப்சிப் ஆனார் அழகிரி. இந்த நிலையில் தான் இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கூட பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை.

திமுகவின் இந்த தேர்தல் தோல்விகள் தான் அழகிரிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. ஓபிஎஸ் – ஈபிஎஸ்சை எதிர்த்தே ஸ்டாலின் அரசியல் பலிக்கவில்லை. ரஜினி களம் இறங்கினால் ஸ்டாலினுக்கு நிச்சயம் சிம்ம சொப்பனம் தான் என்கிற கணிப்பு அழகிரியை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் தான் தனது தீவிர ஆதரவாளரின் குடும்ப  திருமண விழாவில் கலந்து கொண்டு நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் பேசினார் அழகிரி. அதிலும் தான் கலைஞர் மகன் என்று அவர் அழுத்தம் திருத்தமாக பேசியது தான் திமுக மேலிடத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2009 நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன், மத்திய அமைச்சரும் ஆவேன் என்று அதற்கு சில மாதங்களுக்கு முன்னரே அழகிரி கூறி வந்தார். ஆனால் கலைஞர் அதற்கு வாய்ப்பு அளிக்கமாட்டார் என்று விமர்சனங்கள எழுந்தன. ஆனால் சொல்லியது போலவே மதுரையில் போட்டியிட்டு வென்றதுடன் மத்திய அமைச்சராகவும் ஆனார் அழகிரி. இப்படி அழகிரி தான் ஒரு விஷயத்தை கூறினால் அதனை செய்து காட்டும் பழக்கம் கொண்டவர்.

இந்த நிலையில் தான் மதுரை திருமண விழாவில் நினைத்ததை முடிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. அது என்னை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு தெரியும் என்று பேசியுள்ளார். இதன் பின்னணியில் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தும் அழகிரி, தேர்தலில் திமுகவிற்கு எதிரான வலுவான அணியில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக பேசிக் கொள்கிறார்கள். மேலும் அடுத்தடுத்து அரசியல் ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் அழகிரி பேசுவார் என்கிறார்கள்.