முதலமைச்சராக பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு தற்போதே தயாராக வேண்டியதன் அவசியத்தை கூறி நெகிழ்ந்துள்ளார் எடப்படி பழனிசாமி.

இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் வரை நடைபெற்ற கூட்டத்தில் வழக்கமான தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் பின்னர் துறை வாரியாக அமைச்சர்கள்செய்து வரும் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் மிகவும் கேசுவலாக விவாதம் நடைபெற்றுள்ளது. எவ்வித டென்சனோ அல்லது சலசலப்போ இல்லாமல் அமைச்சரவை கூட்டம் நடந்ததாக சொல்கிறார்கள். அதிலும் கூட்டத்தின் நிறைவில் முதலமைச்சர் பேசியது தான் ஹைலைட் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பதவி ஏற்ற போது தன்னை ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்க முடியாது என்று வெளிப்படையாக பேசினார்கள். ஆனால் நாம் இப்போது 3 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டோம். இதற்கு காரணம் முதலில் நம் அமைச்சர் பெருமக்கள் தான்.

இந்த அரசு நீடிக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் எவ்வளவு சிரத்தை எடுத்தார்கள் என்று எனக்கு தெரியும். நம் எம்எல்ஏக்களுக்கு யார் யார் விலை பேசினார்கள், அதனை நாம் எப்படி முறியடித்தோம் என்பதை எல்லாம் நினைத்துப் பார்த்தாலே பெருமையாக உள்ளது. நமக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்றார்கள். ஸ்டாலினை எதிர்கொள்ள முடியாது என்று விமர்சித்தார்கள். ஸ்டாலினிடம் நம் எம்எல்ஏக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என சொன்னார்கள்.

ஆனால் அனைத்தையும் முறியடித்து அதிமுக அரசு தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நமக்கு இவ்வளவு இடங்கள் கிடைத்தது சாதாரணம் இல்லை. தொண்டர்கள் பெரிய அளவில் நம் மீது ஈர்ப்பு இல்லாமல் இருந்தார்கள். இந்த வெற்றிக்கு பிறகு அவர்கள் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதே நம்பிக்கையோடு நாம் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும்.

எனவே நாம் இப்போதே பணிகளை தொடங்கினால் தான் வெற்றி பெற முடியும். ஸ்டாலினை எதிர்த்து நம்மால் எளிதாக வெற்றி பெற முடியும். ஆனால் அதற்கு கடின உழைப்பு தேவை. ஒற்றுமை தேவை என்று கூறி நெகிழ்ந்துள்ளார் எடப்பாடியார். அவர் பேசும் போது மூத்த அமைச்சர்கள் சிலரும் அரசுக்கு வந்த ஆபத்து அதனை முதலமைச்சர் எப்படி முறியடித்தார் என்று கூறி கடந்த கால நிகழ்வுகளை பேசியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.