இந்தியாவின் உட்சபச்ச அதிகார மையமான நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைய மண்டபத்திற்கு நேரில் சென்று 120 கோடி மக்களின் பிரதமரை வழிமொழிந்த தமிழக முதலமைச்சர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

கிங்மேக்கர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சரும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக கோலோச்சியவருமான பெருந்தலைவர் காமராஜர் காலத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கே சென்று அங்கு ஆட்சி அளிக்க ஆதரவு தரும் எம்.பி.,களுக்கு எதிராக விஐபி வரிசையில் அமர்ந்து வழிமொழிந்தது தான் ஹைலைட். 

டி-பார்ட்டியால் கவிழ்ந்துபோன வாஜ்பாயி ஆட்சிக்கு ஜெயலலிதா கொடுத்த ஆதரவு, பின்னர் வாஜ்பாய், மன்மோகன் சிங்கிற்கு கருணாநிதி கொடுத்த ஆதரவு எல்லாம் போயஸ் கார்டன் இல்லம், கோபாலபுரம் இல்லத்தில் இருந்து மட்டுமே தகவல்களாக சென்றன. இதுமட்டுமின்றி கருணாநிதியும், ஜெயலலிதாவும், வழிமொழிதல் மற்றும் முன் மொழிதலுக்கு அழைத்திருந்தாலும் சென்றிருப்பார்களா என்பது கேள்விக்குறியே. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என ஒற்றை இலக்கத்தில் அடித்துப் பிடித்து எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுகவினர் தோல்வியடைந்து பின்னடவை சந்தித்து இருந்தாலும், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் விதத்தில் எடப்பாடிக்கு மோடி கொடுத்த அங்கீகாரம் அனைவரது விழிகளையும் விரிய வைத்தது. ஒரே ஒரு இடத்தைப் பிடித்த எடப்பாடியை, மோடி கழற்றி விட்டுவிடுவார் என்கிற பரபரப்பான பேச்சுகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டது. 

5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கையைப்பிடித்து கெஞ்சியது... மிகப்பெரிய வசீகரத்தன்மை இல்லை என்றாலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் இடைத்தேர்தலில் 9 எம்.எல்.ஏ.க்களை அசால்டாக அடித்து தூக்கியது... உள்கட்சி எதிரிகளை துவம்சம் செய்தது... டி.டி.வி.தினகரனை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கியது... ஓ.பி.எஸ் சைலண்டாக செய்யும் வயலண்டான வேலைகளை லெப்டில் வாங்கி ரைட்டில் அடிப்பது... என ஏற்கெனவே பல விஷயங்களில் துரிதமாக செயல்பட்ட எடப்பாடி இந்தமுறை வரலாற்று சிறப்பு மிக்க பிரதமரை தேர்ந்தெடுக்க முன்மொழிந்தது எம்.ஜி.ஆர், கருணாநிதி, எடப்பாடியே தெய்வமாக பார்க்கப்பட்ட ஜெயலலிதா ஆகியோருக்கு கிடைக்காத கொடுப்பினை.  இதனால் சமகால அரசியல் தலைவர்கள் எடப்பாடி மீது பொறாமையால் பொங்கி வருகின்றனர்.