Lawyers police complaint on H.Raja

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் பேச்சு, பொதுமக்களிடையே மதக்கலவலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி, திருவண்ணாமலை போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர் சீனுவாசன் தலைமையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை போலீஸ் நிலையத்தில், ஹெச் ராஜாவுக்கு எதிராக மனு கொடுத்த வழக்கறிஞர் சீனிவாசன் பேசும்போது, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில், மேடைகளில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொதுமக்களிடையே மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும், மதச் சார்புடையவராகப் பேசி, மத நல்லினக்கத்தைக் கெடுக்கும் வகையிலும், தமிழ் மக்கள் மிகவும் நேசிக்கின்ற திராவிடத் தலைவர்களை மிக கேவலமாக விமர்சனம் செய்து வருவதாக கூறினார்.

நாங்களும் இந்துக்கள்தான். ஆனால், இவரோ இந்து மதத்தின் அத்தாரிட்டிபோல நினைத்துக் கொண்டு கேவலமாகவும் மோசமாகவும் பேசி வருகிறார். அது மட்டுமன்றி மற்ற மதத்தினரைப் புண்படுத்துவது, மற்ற இயக்க தலைவர்களைத் தரக்குறைவாக விமர்சனம் செய்வது, மறைந்து விட்ட தலைவர்களைத் தவறாகப் பேசுவது என இவருடைய நடவடிக்கையால் தமிழ்நாட்டு மக்களிடையே பிளவும், கொந்தளிப்பு ஏற்படுத்துகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

மற்ற இயக்கத்தை சார்ந்தோர், பிற மதத்தினரைக் கேவலமாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் தரக்குறைவாக பொது மேடையில் பேசிவரும்
ஹெச்.ராஜாவால், தமிழகத்தில் கலவரம் மூணடு, சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே, மதம், மொழி, இனம் இவைகளுக்கிடையே பிரிவினையைத் தூண்டி கலவரத்தை உண்டாக்கும் அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹெச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக வழக்கறிஞர் சீனுவாசன் கூறினார்.