திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிட வளாகத்துக்குள் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கில் சிறப்பாக வாதாடி வெற்றி பெற்றுத் தந்த வழக்கறிஞர் வில்சன், அன்றைய  நீதிமன்ற நடவடிக்கைகளை கதறி அழுதவாறே, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனிடம்  விவரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். கருணாநிதியின் உடலை அவர் மிகவும் நேசித்த அறிஞர் அண்ணா நினைவிடத்திலேயே  அடக்கம் செய்யப்பட வேண்டும் என அவர் விரும்பினார்.

அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்  மு.க.ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர், கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்கித் தரவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் காந்தி மண்டபம் பகுதியில் ஒதுக்கித் தருவதாகவும், மெரினாவில் சட்ட சிக்கல்கள் இருப்பதால் இடம் ஒதுக்க முடியாது எனவும் கைவிரித்தார் எடப்பாடி. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர் உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.

திங்கட்கிழமையன்று இரவு  10.30 மணிக்கு இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பு வகிக்கும் குலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அண்ணா நினைவிடத்தில் அவரது தம்பிக்கு இடம் ஒதுக்கலாம் என திமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் வில்சன்  வாதிட்டார். அந்த இடம் கடற்கரை ஏரியாவுக்குள் வராது என்றும், அது கூவம் நதிக்கரை என்றும் நீதிபதிகளிடம் வில்சன் விவரித்தார்.

மேலும் திமுகவிற்கு சாதகமான அத்தனை அம்சங்களையும் வில்சன் எடுத்த வைத்த விதம் அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தது.

ஏற்னவே திமுகவின் வழக்கறிஞரான வில்சனை மறைந்த கருணாநிதி  வின்சன் அதாவது வெற்றிமகன் என்று தான் அழைப்பார். அத்தனை நம்பிக்கைக்குரியவர் வில்சன். தனது தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வாங்காமல் விடக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு வாதாடினார்.

வழக்கு அடுத்த நாள் காலை (நேற்று) 8 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. விசாரணை தொடங்கிதும் முடிந்த அளவு அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன், இடம் அளிக்கக் கூடாது என வாதிட்டார்.

ஆனாலும் விடாக்கொண்டன் வில்சன் மிகச் சிறப்பாக தனது தரப்பு வாதங்களை ஆதாரத்துடன் அடுக்கினார். வாதங்கள் முடிந்த பிறகு தீர்ப்பு வாசிக்கத் தொடங்கினார் நீதிபதி குலுவாடி ரமேஷ்.

அப்போது அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கித் தருமாறு  அரசுக்கு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.  துக்கமும், சந்தோஷமும் தாங்காமல் அந்த இடத்திலேயே வில்சன் உள்ளிட்ட திமுக வழக்கறிஞர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

இந்த செய்தி  கேட்டு  பல லட்சோப லட்சம் திமுக தொண்டர்களும் கண் கலங்கினர். ராஜாஜி ஹாலில் இருந்த ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா, கனிமொழி, ஆலந்தூர் பாரதி என அனைவரும் ஒரு புறம் துக்கதோடு இருந்தாலும் மறுபுறம் தங்களது தலைவர் இறந்தும் போராடி வெற்றி பெற்றுவிட்டார் என கண்ணீர் விட்டனர்.

இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று கருணாநிதியின் சமாதிக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் சட்டப் போராட்டம் நடத்தி, கருணாநிதியின் உடலை அண்ணா நினவிடத்தில் அடக்கம் செய்ய அனுமதி வாங்கிக் கொடுத்த வழக்கறிஞர் வீட்டுக்கு நன்றி தெரிவிக்க சென்றார்.

அங்கு நீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள் குறித்து சுப்புலட்சுமியிடம் விளக்கிக் கூறினார். அப்போது வில்சன் அவரை அறியாமலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

கலைஞருக்கு இறுதியாக செய்த இந்த உதவி தான் பெற்ற பெரும் பேறு என்றும் அந்த மாபெரும் தலைவனுக்கு அண்ணா நினைவிடத்தில் இடம் வாங்கித் தந்ததுதான் நான் வாழ்க்கையில் பெற்ற மிகப் பெரிய வெற்றி எனவும் கண்ணீர் மல்க கூறினார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், வழக்கறிஞர் வில்சனுக்கு ஆறுதலும், நன்றியும் தெரிவித்தார். வழக்கறிஞர் விலிசன் வீட்டில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.