மூத்த வழக்கறிஞரும், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமியின் நண்பருமான வழக்கறிஞர் வெங்கட்ராமன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதா, சசிகலா சிறை செல்ல காரணமாக இருந்தவர். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகித்து வந்தவர் இந்த வெங்கடராமன். காவிரி நடுவர் மன்றத்துக்கான தமிழக வழக்கறிஞராக நிர்வகிக்கப்பட்டவர். ஆனால், அதற்கான ஊதியத்தை தமிழக அரசு வழங்கவில்லை என திடீர் புகார் கிளப்பினார். ஜெயலலிதாவுடன் அப்போது ஆரம்பித்த மனத்தாங்களால் இருவருக்குமிடையே பகையை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் அனைத்து விவரங்களையும் அறிந்தவர் என்பதால் சொத்து குவிப்பு வழக்கில் உதவ வெங்கட்ராமனை அணுகினார் சுப்ரமணிய சுவாமி.

 

வெங்கட்ராமன் கொடுத்த ஆவணங்களை வைத்து தான் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி வலுவாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்தான் ஜெயலலிதாவும், சசிகலாவும் சிறைசெல்ல நேர்ந்தது. ஜெயலலிதாவும், சசிகலாவும் மீண்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் தான் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கால் தான் சசிகலாவின் முதல்வர் கனவு பலிக்காமல் போனது. சசிகலா சிறைக்குப் போனதால் தமிழக முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் அரசியல், ஆட்சி மாற்றங்கள், திடீர் திருப்பங்கள் ஏற்பட அடிப்படை காரணமாக இருந்த வழக்கறிஞர் வெங்கட்ராமன்  கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். வெங்கட்ராமன் மறைவுக்கு அவரது 30 ஆண்டுகால நண்பர் சுப்ரமணியசுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.