காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலிறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் வன்முறையைத் தூண்டிவிடுவதாகவும், இங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு ஸ்டாலின்தான் காரணம் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி பிரச்சனையில்  இறுதித் தீப்பளித்த உச்சநீதிமன்றம், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 6 வாரங்களுக்குள் கண்காணிக்க மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு இதற்கான முயற்சியை எடுக்காமல் 3 மாத அவகாசம் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகமே கொதித்துப் போயுள்ளது, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்ற மு.க.ஸ்டாலின், கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இதே போன்று உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ பாஜக தலைவர் தமிழசை, காவிரி பிரச்சனையை காரணமாக  வைத்து மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் வன்முறையைத் தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு முழு காரணமும் ஸ்டாலின்தான் என்றும் தமிழிசை தெரிவித்தார்.