தமிழகத்தின் முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்தவரும், எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா கடந்த 2016ம்  ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 22 ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 75 நாட்கள் தொடர் சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் டிசம்பர் 5 ம் தேதி மரணமடைந்தார். அவரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதன்காரணமாக அவரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுக சார்பாக காலை 9 .30 மணியளவில் அண்ணாசாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெறுகிறது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

அதிமுகவின் கூட்டணி கட்சியினரும் அமைதி பேரணியில் பங்கேற்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர். அதே போல அமமுக சார்பாக அக்கட்சி உறுப்பினர்களுடன் டி.டி.வி தினகரன் அஞ்சலி செலுத்துகிறார்.