இந்திய கடற்படையின் உதவியுடன் இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக அதிகரித்துவரும் தங்கக் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை முழுமையாக விரைந்து கட்டுப்படுத்துவோம் என இலங்கை கடற்படைத் தளபதி பியாஸ் டிசில்வா நம்பிக்கை தெரிவித்துள்ளார் .  இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக சட்ட விரோதமாக தங்கம் ,  கஞ்சா ,பீடி, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  இதில் பல்வேறு சமூக விரோத கும்பல்கள் மற்றும் கடத்தல் கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.  

கடலோரக் காவல்படை மற்றும் சுங்கத்துறை,  மற்றும் பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்,  அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தல் கும்பல்களை கைது செய்து வருவதுடன் கடத்தல் சம்பவங்களையும் தடுத்து வருகின்றனர் .இந்நிலையில் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் நடக்கும் சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் இலங்கை மற்றும் இந்திய கடற்படைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது .  இந்நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ள இலங்கை கடற்படைத் தளபதி டிசில்வா இலங்கை கடற்படை சார்பில் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது . 

இந்நிலையில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை உதவியுடன் கடத்தல் சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்படும் என்றார் ,  தொடர்ந்து பேசிய அவர், கடத்தல் சம்பவங்களை முற்றிலும்  தடுக்க இலங்கை கடற்படை இந்திய கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும்  ஆலோசனை நடத்தியுள்ளனர். அதனடிப்படையில் எதிர்காலத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவோம் , கடத்தல் சம்பவங்களை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதே இலங்கை கடற்படையின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றார்.