நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வர விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன . வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது .  இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்று தற்போது அங்கே இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பியுள்ளனர்.  ஆனாலும் தமிழர்கள் உள்நாட்டுப் போரின்போது இழந்த நிலம் மற்றும் உடமைகளை இன்னும் முழுமையாக திரும்ப பெறவில்லை .  

அத்துடன் அரசுகள் தமிழர்களை பழிவாங்கும் நோக்குடனும் ,  இரண்டாம் தரக் குடிமக்களாகவுமே  நடத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ,  கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகம் வருகை தந்தார் ,  அப்போது அவர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து இலங்கையில் நிலவும் அரசியல் சூழல்கள்  குறித்து விவாதித்தார்,  அத்துடன் தன்னுடைய தமிழக அரசியலில்  பிரவேசம் குறித்த ரஜினியும்  விக்னேஸ்வரனுடன் கருத்தை பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் வெளியானது, அப்போது  கட்டாயம் ஒரு முறை இலங்கைக்கு வர வேண்டுமென விக்னேஸ்வரன் ரஜினிகாந்த்துக்கு கோரிக்கை வைத்திருந்தார் .  ரஜினியும் அதை ஏற்றுக்கொண்டார்.  இச்செய்தியும்  மிக வேகமாகப் பரவியது. 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வர விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது அதாவது அரசியல் நடவடிக்கைக்காகவே  ரஜினியை இலங்கைக்கு அழைத்து வர உள்ளதாகவும் , எனவே அத்தகைய நடவடிக்கைக்காக விசா வழங்கப்பட மாட்டாது எனவும் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது .  நடிகர் ரஜினிகாந்துக்கு இலங்கைக்கு செல்ல விசா மறுப்பு என்ற தகவல் அரசியல் தளத்திலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .