கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெட்டிமுடிப் பகுதியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 55 பேர் உயிரிழிந்துள்ளனர். இன்னும் பலர் நிலச்சரிவினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.இத்துயர நிகழ்வை இயற்கை பேரிடர் என்று இயற்கையின் மீது மட்டும் பழிபோட்டு நாம் எளிதில் கடந்துவிட முடியாது. காட்டுதீ , பெரும் புயல்கள், அதிதீவிர மழை, அதீத வெப்பம், பனிபாறை உருகுவது, கடல்மட்டம் கூடுவது, கொள்ளை நோய்கள் என இந்நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இயற்கை சீற்றத்திற்கும் மனித செயல்பாடுகளே அடிப்படை காரணமாக அமைகின்றன. இந்த இடுக்கி நிலச்சரிவும் அப்படியான மனித நடவடிக்கை களால் உந்தப்பட்ட ஒரு நிகழ்வு தான் என்கின்றனர் நிலச்சரிவு குறித்து ஆராயும் நிபுணர்கள்.

ஒரு நிலச்சரிவு ஏற்படுவதற்கு பல்வேறு புவியியல் காரணங்கள் ,உருவவியல் காரணங்கள் (Morphological Causes),தட்பவெட்பம், நீரியல் மாற்றங்கள், நிலநடுக்கம் போன்ற புறக்காரணங்களும் (Physical Causes)இதை தவிர மனித செயல்பாடுகளும் (Human Activities) காரணிகளாக அமைகின்றன. பொதுவாகப் பனிமலைகள் உருகுவது, அதீத மழைப்பொழிவு, மணல் அரிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலத்தடி நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் மேலும் இவற்றோடு மனித செயல்பாடுகளாலேயே நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. பல  சமயங்களில் மேற்குறிப்பிட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களின் கூட்டு விளைவுகளால் கூட நிலச்சரிவுகள் ஏற்படலாம்.  இடுக்கி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற காடழிப்பினாலும், தேயிலைத் தோட்ட உருவாக்கங்களினாலும் அந்த நிலப்பகுதி தனது இயல்பான உறுதி தன்மையை இழந்துவிட்டதாக அப்பகுதியில் நிலச்சரிவை ஆராய்ந்து வரும் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். 

இந்நிலையில் தமிழகம் செய்யவேண்டிய  முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் அதன் முழு விவரம்:-  மேற்கு மலைகள் தொடர்பாக மாதவ் காட்கில் குழு கொடுத்த பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்தவேண்டும். 
கடந்த வருடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் அதிகமானவை நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளப் பகுதிகள் என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள 250க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள் காலிசெய்யப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படவேண்டும். மேலும் குறிப்பிட்ட அந்த இடங்களில் புதிதாக எந்தவிதமான கட்டுமானங்களையும் அனுமதிக்கக்கூடாது.  அயல் தாவரங்களை கட்டுப்படுத்தி, அந்த மலைகளுக்கு உரிய இயல் தாவரங்களை மீட்ருவாக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வருடாவருடம் உதகையில் நடைபெறும் மலர் கண்காட்சியை மேட்டுப்பாளையம் அல்லது பொள்ளாச்சிக்கு மாற்றவேண்டும். சுமார் 25-30 வருடங்களுக்கு முன்னர், உதகையை சுற்றுலா தலமாக பிரபலப்படுத்த இத்தகைய விழாக்கள் தேவைப்பட்டன. ஆனால் இப்போது குறிப்பிட்ட அந்த ஒரு வார காலத்திற்கு மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் உதகையில் கூடுகிறார்கள்,

 

அம்மலைகளுக்கு அது மிகப்பெரிய அழுத்தமாக அமைகிறது. தமிழகப் பகுதியில், மேற்கு மலைகளில் உத்தேசிக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வகம் உள்ளீட்ட அனைத்து திட்டங்களையும் கைவிடவேண்டும். மற்ற பல திட்டங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். செயல்பட்டு கொண்டிருக்கும் நீர்மின் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யும் திட்டங்களையும் கைவிடவேண்டும். நீலகிரியில் நிலச்சசரிவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும், அவற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்கக்கூடிய வகையிலும் ‘மாநில நிலச்சரிவு மேலாண்மை மையம்’ மேட்டுப்பாளையத்தில்  அமைக்கப்படவேண்டும். (Landslide Management Centre), அதன் மற்றொரு மையம் வத்தலகுண்டுவில் அமைக்கப்படவேண்டும். இந்த மையத்தில் விஞ்ஞானிகள் மட்டுமில்லாமல் அந்த மலையின் ‘பூர்வகுடிகளை’உள்ளடக்கிய நிபுணர்கள் குழு அமைக்கப்படவேண்டும்.  காலநிலை மாற்றத்தால் தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகளைக் கையாள மாநில அளவிலான "தமிழகக் காலநிலை மையம்" அமைக்கப்படவேண்டும். மேற்கு மலைகள் முழுவதும் இயற்கை வழியிலான விவசாய முறைகளைக் கட்டாயமாக்க வேண்டும். 

நமக்கு எல்லா வளங்களையும் அளித்து நம்மைப் பாதுகாத்த மண் இப்போது நம்மை காவுவாங்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கு இயற்கை காரணமல்ல, நாம் மட்டுமே காரணம். இம்மண்ணின் மீது நாம் நிகழ்த்திய வன்முறைக்கான எதிர்வினையை இப்போது நாம் அனுபவிக்கிறோம். இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தி, நாம் செய்த தவறுகளை சரிசெய்வதே இப்போது நம்முன் உள்ள முக்கியமான பணி.என சுற்றுச்சூழல் அர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.