பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகம் எந்த நேரத்திலும் செயலிழக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

பீகார் முன்னாள் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில், 2017-ல், லாலு அடைக்கப்பட்டார். உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழகத்தின் (ரிம்ஸ்) டாக்டர் பிரசாத் கூறுகையில்;- யாதவின் சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுகிறது என்பது உண்மைதான். இந்த நிலைமை ஆபத்தானது, அவரது சிறுநீரக செயல்பாடு எப்போது வேண்டுமானாலும் மோசமடையக்கூடும். 

அது எப்போது என்று கணிப்பது கடினம்" என்று தெரிவித்தார். மேலும் "அவருக்கு கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருப்பதால், அவரது உறுப்பு சேதமடைவது அதிகரிக்கிறது. இந்த நிலைமை நோயாளியின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்றும் கூறினார். மேலும், அவரை சிகிச்சைக்காக வேறு எங்காவது அழைத்துச் செல்ல வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றமோ அல்லது அரசாங்கமோதான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.