Lalitha does not need Manimandapam - M.K.Stalin
ஊழல் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் கூறப்பட்ட மறைந்த ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் தேவைதானா? என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள
எம்.ஜிஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு
கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஏற்கனவே அறிவித்தது.
இந்த மண்டபம் கட்டுவதற்காக 50 கோடியே 80 லட்சம் ரூபாய் அளவில் டெண்டா் விடப்பட்டன. இதைத்தொடா்ந்து இன்று காலையில் மெரினாவில்
ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. நினைவு மண்டபம் கட்டுவதற்கான யாகசாலை பூஜைகள் காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், உச்சநீதிமன்றமே ஊழல் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட மறைந்த ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் தேவைதானா? என்று கேள்வி எழுப்பினார்.
மறைந்த ஜெயலலிதா, ஊழல் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஏ1 குற்றவாளி என்று உச்சநீதிமன்றமே உறுதி செய்திருக்கிறது. அவருக்கு மணிமண்டபம் கட்டுவதென்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஊழலுக்காக சிறை சென்றவருக்கு மணிமண்டபமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழக மாணவர்களை அவமானப்படுத்தும் வகையில் சிபிஎஸ்இ செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அனைத்து கட்சி கூட்டம் நாளை கூட்டப்பட உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
